Wednesday, 28 December 2016

நன்றி 2016! வணக்கம் 2017!!

2016 வருட காலண்டரில் இன்னும் சில தாள்களே இருக்கும் தருணத்துக்கான பதிவு இது.



நம்மில் பலருக்கு வருடங்கள் ஆரம்பிப்பது மட்டுமே நினைவில் இருக்கும்.அதற்குப் பிறகு  டிசம்பரின் கடைசி வாரத்தில்  “அட இவ்வளவு சீக்கிரமாக  ஒரு வருஷம் ஓடிவிட்டதா?” என்று யோசிப்பதில் வந்து நிற்போம்.

வருடத்தின் கடைசி நாட்களில் 'இந்த வருடம் என்ன செய்தோம்'? என்று கணக்குப் பார்ப்பதும் , அடுத்த வருடத்திற்கான ஒரு சில உறுதி மொழிகளை ஏற்றுக் கொள்வதும்(பின் நாலைந்து நாட்களுக்குள் அதை பரணில் தூக்கிப் போடுவதும்) ஆன சில விஷயங்கள் சம்பிரதாயமாக மாறி வருகிறது.
இது நல்லதா கெட்டதா என்ற பட்டிமன்றத்துக்கான  தீர்ப்பை 'சாலமன் பாப்பையா' வோ  இல்லை திண்டுக்கல் லியோனியோ வரும் ஒன்றாம் தேதியின் சிறப்பு பட்டிமன்றத்தில் சொன்னால் தான் உண்டு .

புது வருடங்கள் எப்போதுமே புதுப்புது நம்பிக்கைகளுடன் தான் பூக்கிறது. இல்லை இல்லை! , பூக்க வைக்கப்படுகிறது.  நேற்று வரை வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்ற விஷயங்களுக்கு புத்தாண்டிலிருந்து வழி பிறக்கும் என நம்ப ஆரம்பிக்கிறோம். ‘நம்பிக்கை அதானே எல்லாம்’ என ‘நமக்கு நாமே’ திட்டத்துக்கு மாற முயற்சிக்கிறோம் .

365 நாளும் மூச்சுவிட்டதை தவிர்த்து ஒன்றும்  பெரிதாக கிழிக்கவில்லை “ என்றும்  'எத்தனை முறை வாய்ப்புகளை வசதியாய் தவற விட்டிருப்பேன் ' என்ற சுய கழிவிரக்க எண்ணங்களையும் கடந்து செல்வது கடினமாகத்தான் இருக்கிறது. "நானும் மாறப் போகிறது இல்லை,  நீங்களும் மாறப் போகிறது இல்லை,  ஆனால் வருஷம்  மட்டும் மாறிக்கொண்டே  போகிறது" என்று ரன்னிங் கமெண்ட்ரி அடிக்கும்  உங்களுக்கும் எனக்கும் கூட புதுவருடம் ஆரம்பமாகும் காலங்களில் மனதில் ஒரு ‘புது விதமான மகிழ்ச்சி மட்டும் வருடம்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.


அந்த மகிழ்ச்சியானது புதுமனைவியை கொண்டாடும் கணவனின் பார்வையோடுதான்  ஆரம்பமாகிறது, ஆனால் கடைசியில் வரதா புயலைப் போல  நம்மை புரட்டி போடுவதில் முடிகிறது.

ஒவ்வொரு கடந்துபோன நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களும், நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றை விதைத்து விட்டுதான் போயிருக்கின்றன, அது நல்லதோ, கெட்டதோ, அதற்கான பயனை, அறுவடையை அடுத்து வரப்போகும் வருடங்கள்தான் தீர்மானிக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் எல்லா விதங்களிலும் வளர்ந்து கொண்டேயிருக்கிறோம். உருவத்தில் , உள்ளத்தில், படிப்பில் , பக்தியில், பயத்தில், செலவில், செல்வத்தில்  ++ என வளர்ச்சி பட்டியல் வளர்ந்துக் கொண்டேயிருக்கிறது.

வளர்ச்சி என்கிற விஷயம்மட்டும்  உங்களையும் என்னையும் கடந்து நடந்து விடுகிற நல்ல விஷயம் .

சென்ற வருடமும் உள்ளும் புறமும் நம்மை வளர்த்து விட்ட இறைமைக்கு நன்றி சொல்லுவோம்.


புது வருட முன் முடிவுகள் :

எல்லா வருடக்கடைசியிலும் கடன்காரரை விட கேவலமாக நம்மைத்  துரத்தும் கேள்வி இது. பெரும்பாலும் பெருத்த சத்தங்களோடு தொடங்கப்பட்டு பின்னர் அப்படியே காணாமல் போகின்றவையாக இருக்கின்றன. நம்முடைய நலத்தை,பண்புநலனை, நம்மை சார்ந்திருக்கும் சிலரை திருப்திப்படுத்தும் போக்கை கட்டிகாக்க எடுக்கும் உறுதிமொழியாகவே  பெரும்பாலும் இவை அமைகின்றன. 

மனதிருந்தால் முடிவெடுத்து கொஞ்ச நாள் நல்லவனாக இருந்து பாருங்கள். கஸ்டம் புரியும்.எனக்கு பிடித்த,  எல்லா வருடமும் நான் எடுக்கிற சில முன் முடிவுகள் உங்களுக்காக ..

1. சின்ன சின்ன நல்ல விஷயங்களுக்காக சுற்றி இருப்பவர்களை  வாழ்த்தப் பழகலாம். கொஞ்சமே கொஞ்சம் கூட சேர்த்து  சிரிக்க முயற்சிக்கலாம்
2. வேளாவேளைக்கு சாப்பிடலாம். -உங்க சாப்பாட்டைதாங்க
3.எதையாவது அவ்வப்பொழுது வாசிக்கலாம்- செய்திதாளாவது/புத்தக வடிவில்- கண்ணுக்கும் கரண்ட் பில்லுக்கும் நல்லது
4.பயணம் போங்கள். குறைந்தபட்சம் எப்பொழுதும் ஆபீஸ் போகும் ரூட்டை மாற்றி இன்னொரு வழியில் பயணம் போங்கள். உலகை ரசியுங்கள்.
5.பிஸி பிஸி என்று சொல்வதை நிறுத்திவிட்டு மிசின்,வேலை, கம்ப்யூட்டர் . காட்ஜெட்  என்கிற ஜடங்களுக்கு நடுவே மனிதர்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள் – நான் மிசின் இல்லை என்பதை  நிருபிக்கவாவது
6. மனது என்கிற வஸ்து உங்களைப் போலவே எல்லாருக்கும் இருக்கிறது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள் அடிக்கடி.
7.உங்களின் நண்பர்களுடன் தொடர்பு எல்லைக்குள் இருக்க முயற்சி செய்யுங்கள் - அட நண்பிகளையும் சேத்துதாம்பா!!


இறந்துபோன மாதங்கள்
மறந்து போன வாரங்கள்
கடந்துப் போன நாட்கள்
தவறிப் போன மணித்துளிகள்
சிதறிப் போன விநாடிகள்
உதறி தள்ளிய வாய்ப்புகள்

இத்தனைக்கும் ஒரு நிமிடம் 
மௌன அஞ்சலி செலுத்திவிட்டு
வரவேற்போம் புதிய வருடத்தை!!,

முயற்சி விதைகளை தூவி
நம்பிக்கை பயிர்களை
முளைக்க செய்வோம் !!

புதிதாய் பிறந்த
புத்தாண்டு குழந்தையை
அன்பாய் வளர்த்து
அர்த்தமுள்ளதாக்குவோம் !!
புத்தாண்டிலே,
நினைவுகள்  நிஜங்களாகட்டும்
நிதம் நிதம்  புதிதாகட்டும்
வளங்கள் வாழ்த்திப் பாடட்டும்.
அன்பு அனைவருக்கும் சொந்தமாகட்டும்.

Thank you 2016! Welcome 2017!! 
- Sagaya @ Sasi