Sunday, 14 May 2017

Mind 8 - எதற்கெல்லாம் கவுன்சிலிங்க் வேண்டும்?

வணக்கம்!!

    சின்னச்  சின்ன கவலையிலிருந்து  பெரிய பெரிய பஞ்சாயத்துகள் வரைக்கும் நீங்களும் நானும் அன்றாடம் கடந்து போகிற கனத்த விஷயங்கள் அதிகம்.

இதனால் சோகமாகவோ, மனத்தளர்வுடனோ, மனக்கசப்புடனோ , சிரித்து செல்ஃபி எடுத்து முகநூலில் போட முடியாத முகவாட்டத்தோடோ  முடிந்துப் போகிற இரவுகளும் உண்டு.

இவற்றுக்கு நாமாக நமக்கு ஐஸ் வைத்தோ இல்லை பிரியாணி டீ ரீட் குடுத்தோ, நண்பர்களிடம், உறவினர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவோ, இத்தகைய உணர்வுகளில் இருந்து விடுபட்டுவிடுவோம்.

ஆனால், இந்தக் கசப்பான உணர்வுகள் தொடர்ந்து பல வாரங்களோ, மாதங்களோ நீடித்து, அன்றாட வாழ்க்கையையே பாதிக்குமானால், என்ன செய்யலாம்? இல்லையில்லை எதையாவது செய்ய வேண்டும் தானே?

சிலவை உடல் சார்ந்தோ, பொருள் சார்ந்தோ இருப்பது ஓரளவுக்கு உண்மை தான் என்றாலும் முக்கால் வாசி கஷ்ட நஷ்டங்களுக்கு மனம் என்கிற வஸ்தும் அது சார்ந்த இத்யாதிகளுமே காரணமாகிறது என்பது நூறுக்கு நூற்றுப் பத்து சதவீதம் உண்மை.

எது உடல் சார்ந்த மாற்றங்கள் எது மனம் என்கிற மோடி மஸ்தானின் வேலை என்று தெரிந்துக் கொள்ள நீங்கள் இதைத் தொடர்ந்து படிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

1. சூழ்நிலையிலிருந்து விலகி இருத்தல் (Withdrawn State)
நாம  எல்லாம்  "கலக்கப்போவது யாரு ?" பாத்து சிரிச்சிட்டு இருக்கும் போது சார் தனியா  சீரியஸா யோசிச்சுட்டு இருப்பார். தனித்து விடப்பட்டதாய் உணருவார் .
அவர் நம்ம ஆளு!

2.  மற்றவர் மேல் ஈடுபாடு குறைதல் (Loss of interest on others)
நேற்றுவரை  நல்லாக் கூடி கும்மியடித்தவர் இன்றைக்கு விலகி போவார். "நல்லா இருக்கீங்களானு " கேட்டா " ஏதோ இருக்கேன்  பிரதர் " னு ஒரு கேரக்டர் நகர்ந்தால் இந்த கேட்டகிரி அவர்.

3. பலகீனமாக/ பயனற்றவராக உணர்தல் (Feeling low and Week)
“அட என்ன சகா வாழ்க்கை. ஒரே கடுப்புயா” என்ற வார்த்தைகளை அடிக்கடி  உதிர்த்தால் நீங்க உஷாராக வேண்டியத்  தருணம் இது .
ரொம்ப  சோம்பேறித்தனமாக  உணர்தல் .  ஒன்றுக்கும்  லாயக்கில்லை, இதையெல்லாம் செய்ய முடியாது என்பது போன்ற எண்ணங்கள் அடிக்கடி வருதல்.

4. செயல் குறைபாடு (Drop in Functioning)
தெரிந்த, நேற்று வரை செய்து "சபாஷ்டா அம்பி" என்று வாழ்த்துப் பெற்ற வேலையை ஏகப்பட்ட கஷ்டத்துக்குப் பிறகுத் தப்பும் தவறுமாக செய்து எக்கச்சக்கத் திட்டு  வாங்கிக் கட்டிக்கொண்டிருந்தால் அவர் கவனிக்கப் படவேண்டியவர்  

5. சிந்திப்பதில் குறைபாடு( Problems in thinking )
கவனக்குறைவு, மறதி,  ப்ளாங்கா - யோசிக்க முடியாத தன்மை.தெளிவற்ற சிந்தனை/பேச்சு, லாஜிக்  இல்லாத யோசனைகள் 

6. அதீத உணர்வுபெருக்கு (Increased sensitivity)
அதிக சந்தோசம்,அதிக கவலை. பார்க்கிற கேட்கிற தொடுகிற  விஷயங்களில் அதிக  இருத்தல். சின்ன சின்ன விஷயங்களிலும் நல்ல ஆப்செர்வஷன்.

7.ஆர்வமின்மை (Apathy and lack of interest)
புது மனிதர்களைப் பார்ப்பதில், பழகுவதில் பயம் மற்றும் தயக்கம். புது ரிஸ்க் எடுப்பதில் உறுதியின்மை

8. நடுக்கம் மற்றும் பயம் (Nervousness and Fearness)
பொருட்களை , ஆட்களைப் பற்றின பயம். இறப்பைக் குறித்த எண்ணங்கள். எதெற்கெடுத்தாலும் சந்தேகம்.

9. தூக்கம் மற்றும் தன் உடல் சார்ந்த மாற்றங்கள்  ( Sleep and Appetite changes )
தூக்கமின்மை , பகலில் அதிக நேரம்  தூங்குதல். தன் உடல்  சார்ந்த பராமரிப்புகளை செய்யாமல் இருப்பது

10. உணர்வு  மாற்றம் ( Frequnet Mood Changes )
கோபம் , துக்கம் , சந்தோசம் என நவரசங்களையும் உடனுக்குடன் மாற்றி  கடுப்பேத்தும் குணம்

11. மருத்துவ பரிசோதைகளுக்குப் பிறகு கண்டுப்பிடிக்க முடியாத நோய்கள்  ( Unidentified deceases) 
12.  கட்டுப்படுத்த முடியாத வன்முறை, போதை பழக்கங்கள் (Violence and addiction)
13. பாலுறவில் ஈடுபாடு இல்லாமை,வெறுப்பு, அதிகமான பாலுணர்வு ஆசைகள் ( Problems with Sexual feelings )
14.  பசியின்மை, அதீத பசி, உணவைக் குறித்த வெறுப்பு . திடீர் உடல் எடை கூடுதல் /குறைதல் (Food and obesity related issues)

இன்னும் பிற ஒரு டஜன்அறிகுறிகள் . 
படித்து முடித்தாயிற்றா?. இப்போ ஆக்க்ஷன் டைம்.

ஒரு அறிகுறியை மட்டும் வைத்து முடிவுக்கு வரமுடியாது . பல அறிகுறிகள் ஒரே நேரத்தில் சில வாரங்களுக்கு இருந்து அதனால் தினசரி வாழ்க்கை பதிக்குமானால் கட்டாயம் உளவியல் ஆலோசகரை சந்திக்க வேண்டும் .

செலவு ரொம்ப கம்மிதான் 200 ரூபாயிலிருந்து 500-க்குள் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.

வாழ்த்துகள்!...
-சகாயா