Wednesday, 20 November 2013

நடமாடும் நீதிபதிகள்…!

நடமாடும் நீதிபதிகள்…!
  வீட்டிற்கு போகலாமென முடிவெடுத்து முடிக்கவே முடியாத வேலைகளை மூடிவைத்து விட்டு எழுந்தான் நவீன்.எட்டுமணி நேர வேலைக்கு காலை எட்டு மணிக்கு வந்து இரவு எட்டுமணிக்கு திரும்பும் நல்லவன் நவீன்.

            ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தவாறே முதுகில் மாட்டியிருந்த பையை சரிசெய்தபடி நடந்தான். அலுவலகத்திற்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் ஐநூறு மீட்டராவது இருக்கும் காலை அவசரத்தில் அவ்வளவு தூரம் எரிச்சலாயிருக்கும் நவீனுக்கு, மாலையில் அந்த தூர நடை சற்று ஆசுவாசப்படுத்துவதைப் போலிருக்கும்

நிற்பதுவே! நடப்பதுவே!! பறப்பதுவே!!” என்ற வரிகளைப் பாட ஆரம்பிக்கும் போது பேருந்து நிறுத்தத்தை சேர்ந்து நாலைந்து தாய்மார்களோடும் ஐந்தாறு ஆண்களோடும் ஏழெட்டு தன் வயதொத்த இளையோரோடும் உட்கார்ந்திருந்த  ஒரு பெரியவரோடும்  ஒன்றிரண்டு நாய்களோடும் கலந்து விட்டிருந்தான். எம் ஆரின் பேருந்து நிறுத்தங்கள் சாலை ஓரங்களே. உங்களுக்கு தெரியாததா என்ன ?

    கைகளில் அலைபேசியும் காதுகளில் அந்த வஸ்துவையும் மாட்டிக்கொண்டிருக்கும் ஏழெட்டுப் பேரில்  தான் மட்டும் தனித்து இருப்பதாக பட்டது நவீனுக்கு. நவீனின் இசை ஆர்வம் ஏனோ வீட்டோடு நின்றுவிடும் !.

பத்து நிமிடம் பறந்திருக்கக்கூடும். ‘தான் காத்திருக்கும் பேருந்து மட்டும் எப்போதும் தாமதம்மாக வருவதென்பது தனக்கு மட்டும் தானா?’ என்ற சந்தேகம்  ஆகப் பெரியக் கேள்விக்குறியாய் வலுத்தது நவீனுக்கு.

அவசர அவசரமாய் ஓடிகொண்டிருந்த வாகனங்கள் சக்கரமில்லாமலேயே பரபரப்பாய் கடந்த மனிதர்கள் என பதட்டத்தோடு இருந்தது சாலை. யாரையாவது பிடித்துஎதற்கு இவ்வளவு அவசரம்?” என கேட்க வேண்டுமென பரபரத்தது நவீனுக்கு.

சாலைகளைத் தவிர்த்து விட்டு சக மனிதர்களை நோட்டம் விட்டான் ஓரமாய் உட்கார்ந்திருந்த  மனிதரிடம் பார்வை நிலைக்குத்தியது.

முதுமையில் புதிதாய் இணைந்திருந்த தோற்றத்தில் இருந்த அவரின் உடை சிறிது அழுக்கையும் ஆடையாய் உடுத்தி இருந்தது.கண்கள் பாதி மூடியபடி  நிலைகொள்ள மறுத்து இடதும் வலதுமாய் சாய்ந்தபடி இருந்தது. அதனால் தானோ என்னவோ அவரால் நிற்க இயலாதபடி அமர்ந்திருந்தார் போலும். பேருந்து நிறுத்தமும் சாலை ஓரமும் இணையுமிடத்தில் இருந்த அவர் போவோர் வருவோரின் பார்வைக்கு தப்பவில்லை. இருகைகளையும் தரையில் ஊன்றியபடியே எச்சத்தத்தையும் அசட்டை செய்யாமல் அமர்ந்தவாறே தள்ளாடிக்கொண்டிருந்தார். அவரது ஒற்றை செருப்பு ஓரிரு அடி தள்ளி நின்று அவரை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது.

 ”குடித்திருக்கலாமோ ?”. ஏற்கனெவே வலிக்க ஆரம்பித்திருந்த தலையைக்  கஷ்டபடுத்த விரும்பாமல் யோசிப்பதை நிறுத்திவிட்டு , கழுத்தில் அடையாள அட்டை மாட்டியிருந்த பெண்களை நோக்கத்  தொடங்கினான் நவீன். சிவப்பாய், அழகாய், நீண்ட கூந்தலோடு காதுகளில் வளையம் மாட்டியிருந்த பெண்ணை பிடித்திருந்தது. தொடர்ந்து பார்த்ததால் சிரிப்பது போலிருந்ததுமனது வானில் பறக்க ஆரம்பித்தது .

ஏதோ சத்தம் கேட்டு நிஜ உலகத்திற்கு  வந்த நவீனுக்கு ஒரு இரு சக்கர பெண் வாகனவோட்டி ஓரமாய் தள்ளாடியபடி உட்கார்திருந்த மனிதருக்கருகேகிரீச்சென்ற  சத்தத்தோடு நிறுத்தி திட்டி விட்டு சென்ற காட்சி தெரிந்தது.

இப்போது எல்லோருடைய கண்களும் தள்ளாடி உட்கார்ந்திருந்தவரின் உடலுக்கு மாறின. “என்னங்க, பாக்க ஆளு நல்லத்தான்  இருக்கான்! ஆனா இப்படி மண்தரையில குத்துக்க வச்சு உட்கார்ந்திருக்கான்குடிச்சிருப்பானோ?” என ஒருமையில் கேட்டார் எனக்கு பக்கத்திலிருந்தவர்.

இருக்குங்க! இல்லனா இவ்ளோ நேரம் இப்படி உட்கார்ந்திருப்பானா ? நானும் வந்ததுலேர்ந்து பாக்குறேன். உடம்பு வேற ஆடுதுஏன்தான் இவனுங்க இப்படி இருக்கிறாங்களோ? ” இது இன்னொருத்தர்.

எல்லாருக்கும் குடிப்பதற்கு ஏகபோக வசதிகள் செய்து கொடுத்த பெரியோர்களை யாரோ சிலர் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டினர். சிலர் வந்த பேருந்துகளில் ஏறி ஓடினர்.

ஆளுக்கு ஆள் மாற்றி மாற்றி தங்களுக்குள் பேசித் தாங்கள்பொதுசனம்என்ற பட்டத்திற்கு தகுதியானவர்கள்  என நிருபித்துக்கொண்டிருந்தார்கள். நவீன் ஒரு பார்வையாளனாக மாறி சிலமணித்  துளிகள் ஆகியிருந்தன.


சற்று நேரத்துக்கு பிறகு நெற்றியில் பெரிய பொட்டு வைத்த ஒரு பெண்மணி பெருங்குரலெடுத்து கத்தினார்ஏன் இப்படி குடிச்சிட்டு ஒடம்ப கெடுத்துக்கறது மட்டும் இல்லாம மானத்த வாங்கிக்கிற ? பொண்டாட்டி பிள்ளைங்க பாத்தா எம்மாங்  கஷ்டப்படும்?? தள்ளி போ நாயே! ஏன்யா பாத்துட்டு நிக்குறீங்களே? கொஞ்சம் தள்ளி உட்கார வைக்கலாமில்ல?” கூறியபடியே அந்த ஆளை தொட்டு உலுக்கினார் அந்த அம்மா. அப்போதுதான் நினைவுக்கு வந்தவரை போல அந்த மனிதர்ஐயோ மன்னிச்சிகிங்க அம்மா, அப்படியே பசியிலகிறு கிறுன்னு வந்து பாதிமயக்கமா இருந்திச்சி நடக்க முடியல அதான் ஒரு ஓரமா உக்காந்துட்டேன் அரை மயக்கத்துல இருந்தாலும் சத்தியமா குடிக்கலமாஎன சொல்லிக்  கொண்டே தள்ளி கிடந்த செருப்பை எட்டி எடுத்து மாட்டிகொண்டு வேகமாய் போய்க்கொண்டிருந்த கூட்டத்தோடு தனது கால்களை இழுத்துக்கொண்டு கைகளால் நடந்து போனார்.

No comments:

Post a Comment