வருடத்தின் கடைசி நாள் இன்று. ஒரு வருடம் முழுதாய் ஓடிவிட்டது. நம்மில் பலருக்கு வருடங்கள் ஆரம்பிப்பது மட்டுமே நினைவில் இருக்கும்.அந்த வருடம் முடியும் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் தோன்றுகிறது, “அட இவ்வளவு சீக்கிரமா ஒரு வருஷம் ஆகிப்போச்சா?”.
புது வருடங்கள் எப்போதுமே எதிர்பார்ப்புடன் தான் ஆரம்பிக்கப் படுகிறது. நேற்று வரை வழி தெரியாத விஷயங்களுக்கு ஏதோ நாளை ‘புத்தாண்டி’லிருந்து வழி பிறக்கும் என நம்ப ஆரம்பிக்கிறோம். “நம்பிக்கை அதானே எல்லாம்” என்று சமாதனம் சொல்லிக் கொள்கிறோம்
“365 நாளும் மூச்சுவிட்டதை தவிர்த்து ஒன்றும் பெரியதாக கிழிக்கவில்லை “ என்றும் “ஆமாம் முடிந்து போன வருடத்தில் எதை செய்து முடித்தேனோ?” என்றும் யோசிக்கும் உங்களுக்கும் எனக்கும் கூட புதுவருடம் ஆரம்பமாகும் காலங்களில் மனதில் ஒரு ‘புது விதமான மகிழ்ச்சி’ மட்டும் வருடம்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.
அந்த மகிழ்ச்சியானது புதுமனைவியை கொண்டாடும் கணவனின் பார்வையோடுதான் ஆரம்பமாகிறது, ஆனால் கடைசியில் பைலின் புயல் கரை கடப்பது போல வடிந்து விடுகிறது.
ஒவ்வொரு கடந்துபோன நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களும், நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றை விதைத்து விட்டுதான் போயிருக்கின்றன, அது நல்லதோ, கெட்டதோ, அதற்கான பயனை, அறுவடையை அடுத்து வரப்போகும் வருடங்கள்தான் தீர்மானிக்கின்றன.
என்னைப்பொறுத்த வரையில் ஒவ்வொரு வருடமும் எல்லா விதங்களிலும் வளர்ந்து
கொண்டேயிருக்கிறேன். வளர்ச்சி என்கிற விஷயம்மட்டும் நீங்களே நினைத்தாலும் மாற்ற முடியாது. சென்ற வருடமும் உள்ளும் புறமும் நம்மை வளர்த்து விட்ட இறைமைக்கு நன்றி சொல்லுவோம்.
புது வருட முன் முடிவுகள் :
எல்லா வருடக்கடைசியிலும் கடன்காரரை விட கேவலமாக நம்மைத் துரத்தும் கேள்வி இது. பெரும்பாலும் பெருத்த சத்தங்களோடு தொடங்கப்பட்டு பின்னர் அப்படியே காணாமல் போகின்றவையாக இருக்கின்றன. அல்லது நம்முடைய நலத்தை,பண்புநலனை, நம்மை சார்ந்திருக்கும் சிலரை திருப்திப்படுத்தும் போக்கை கட்டிகாக்க எடுக்கும் உறுதிமொழியாகவே இவை அமைகின்றன. மனதிருந்தால் முடிவெடுத்து கொஞ்ச நாள் நல்லவனாக இருந்து பாருங்கள் கஸ்டம் புரியும்.
எனக்கு பிடித்த எல்லா வருடமும் எடுக்கிற சில முன் முடிவுகள் உங்களுக்காக ,
1.எல்லாரைப்பற்றியும் குறை சொல்வதை குறைத்துக்கொள்ளலாம். — போரடிக்குதுங்க கொஞ்ச நாளைக்கு விடுப்பு விடலாமே
2. வேளாவேளைக்கு சாப்பிடலாம். -உங்க சாப்பாட்டங்க
3.எதையாவது அவ்வப்பொழுது வாசிக்கலாம்- செய்திதாளாவது/புத்தக வடிவில்- கண்ணுக்கும் கரண்ட் பில்லுக்கும் நல்லது
4.பயணம் போங்கள். குறைந்தபட்சம் எப்பொழுதும் ஆபீஸ் போகும் ரூட்டை மாற்றி இன்னொரு வழியில் பயணம் போங்கள். உலகை ரசியுங்கள்.
5.பிஸி பிஸி என்று சொல்வதை நிறுத்திவிட்டு மிசின்,வேலை,கோப்பு என்கிற ஜடங்களுக்கு நடுவே மனிதர்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள் – நான் மிசின் இல்லங்கிறத நிருபிக்கவாவது
6. மனது என்கிற வஸ்து உங்களைப் போலவே எல்லாருக்கும் இருக்கிறது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள் அடிக்கடி.
7.உங்களின் நண்பர்களுடன் எப்பொழுதும் தொடர்புடன் இருங்கள்- அட நண்பிகளையும் சேத்துதாம்பா
பண்படுத்தி கரைந்து போகிற
வருட முடிவின் சாம்பல்
முளைக்கப்போகும்
பூச்செடிக்கு உரமாகட்டும் !
புத்தாண்டிலே,
நினைவுகள் நிஜங்களாகட்டும்
நிதம் நிதம் புதிதாகட்டும்
வளங்கள் வாழ்த்தி பாடட்டும்
அன்பு அனைவருக்கும் சொந்தமாகட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 

No comments:
Post a Comment