நீ அன்னை தெராசா போல வாழ வேண்டாம் !!
1997 ஆம் வருடம் ஒரு நாள் நான் படித்த புனித மரியாள் துவக்க பள்ளியின் காலை வணக்க கூட்டத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த சொன்னார்கள். அன்னை தெராசா என்கிற ஒரு நல்ல மனிதர் மறைந்து விட்டார் என செய் ‘தீ’த் தாள்கள் சொல்ல ஆரம்பித்தன..
அதற்கு முன்பே அவரைப்பற்றி கேள்விப் பட்டிருந்தாலும் ,இரண்டாம் வகுப்பு படித்த எனக்கு அப்போது தெரிந்ததெல்லாம் குட்டையான உருவம் முகம் சுருங்கிய ஒருவர், நிறைய கருணை உள்ளம் கொண்ட ஒரு சகோதரி.. அதற்கு பின்னர் வேகமாக படிக்க ஆரம்பித்த நாட்களில் இவரைக் குறித்து அதிகம் படிக்க ஆரம்பித்தேன் . வெறும் பேச்சுக்காக அன்னைதெரெசா என ரோல் மாடல் என சொல்லுவதைக் காட்டிலும் அவர்களை போல மாற முயற்சித்தாலே நல்லது என்பதை தெரிந்து கொள்ள சில காலம் எடுத்தது உண்மை தான்!!
அன்னை தெரசா என உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ(Anjezë Gonxhe Bojaxhiu).( சிறுமலர் என்று அர்த்தம் )
யுகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிலோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே (Skopje) நகரில் 1910-ஆம் ஆண்டு அன்னை தெரசா பிறந்தார். ஆகஸ்டு 26-ஆம் நாள் தெரசா பிறந்ததாகச் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமது பிறந்த நாள் ஆகஸ்டு 27-ஆம் நாள் தான் என்பதைத் தெரசாவே உறுதிபடுத்தியுள்ளார்.( அவருக்கு ஞானஸ்நானம்(Baptism) செய்யப்பட்ட ஆகஸ்ட் 27-ம் தேதியைத்தான் தன்னுடைய உண்மையான பிறந்த நாள் என்பார்!)
1922-ஆம் ஆண்டில் தனது 12-ஆவது வயதில், வறுமையால் வாடும் மற்றவர்களுக்காகத் தனது வாழ்வை ஒப்படைத்துக் கொள்ள முடிவு செய்து கொண்டார்.தொண்டுக்காகப் பிறந்தவள் தான் என்பதை உணர்ந்த தெரசா, 1929-ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு வந்தார். அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண்.தொடக்கத்தில் அவர் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1946-ஆம் ஆண்டு டார்ஜிலிங்கிற்குத் தொடர்வண்டியில் சென்று கொண்டிருந்த போது, சேரியில் அல்லல்படும் வறியவர்களுக்குத் தொண்டாற்ற வருமாறு உள்ளுணர்வு அழைத்ததன்படி, இந்தக் கடமையை நிறைவேற்றப் பள்ளியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இதற்கு அனுமதி கிடைத்தது. உடனடியாக முதல் உதவி மருத்துவத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டு சேரி மக்களுக்குத் தன் தொண்டைத் தொடங்கினார்.
1948 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைப் பெற்று நீல வெள்ளைப் புடவையுடுத்தி பணி செய்யத் தொடங்கினார்.
தெரசாவின் தொண்டு உள்ளத்தைக் கண்ட சகோதரிகள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவராக அவருடன் பணியாற்ற இணைந்ததால் கருணை இல்லம் (’மிஷினர் ஆப் சேரிடிஸ்’) என்னும் சமூகத் தொண்டு அமைப்பை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு அன்னையாகத் தெரசா திகழ்ந்தார்.
சமூகத்தில் கைவிடப்பட்டவர்களான தொழு நோயர்களையும் சாவின் விளிம்பில் கிடந்த பிச்சை எடுப்பவர்களையும் தெரசாவும் அவரது அமைப்பினரும் தேடிப்பிடித்து உதவினர். மற்றவர்களால் மறுக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தரும் இடமாகத் தெரசாவின் அமைப்பு விளங்கியது. தெரசாவின் கருணை உள்ளத்தால் உருவான அந்த அமைப்பு பல நாடுகளிலும் பரவியது.
இதற்குப் பின்னால் வந்த விருதுகளும் அந்த தொண்டுகள் வளர்ந்த விதமும் கூகுள் உங்களுக்கு சொல்லித்தரும். அது சொல்லாத சில விஷயங்கள் உங்களுக்கு ,
- 27 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவரைப்பற்றி ஆங்கில மொழியில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்து இருக்கின்றன. 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன!
- ‘ஒவ்வொரு மனிதரிடத்திலும் நான் கடவுளைக் காண்கிறேன்; ஒரு தொழுநோயாளியைத் தொடும்போது இறைவனையே தொடுவதுபோல் உணர்கிறேன்’ என்பது இவரின் புகழ் பெற்ற வாசகம்!
- தன்னைச் சார்ந்தோருக்கும், தன் அறக்கட்டளைகளில்! இருப்போருக்கும், கிறிஸ்துவ மதகுருமார்களுக்கும், இன்ன பிற நண்பர்களுக்கும், 66 ஆண்டுகாலமாகத்தான் எழுதிய கடிதங்களை அழித்துவிடச் சொன்னார். அதற்கு இவர் சொன்ன காரணம், `மக்கள் இந்தக் கடிதங்களை அறிய வரும் பட்சத்தில் இயேசுவைவிட என்னை மேலாக எண்ணிக்கொள்வார்கள்.’ இவர் மறைவுக்குப் பிறகு, இவர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு `மதர் தெரசா –கம் பி மை லைட்’ என்ற பெயரில் வெளிவந்தது!
- `சம்திங் ப்யூட்டிஃபுல் ஃபார் காட்’ என்ற படம் இவரின் புகழை உயர்த்தியது
- அவரைப் புகழ்ந்தவர்களிடம், ”கடவுள் கை காட்டிய கடமையைச் செய்கிறேன்’’ என்று புன்னகையுடன் விடையளித்தார்
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது .. சில வருடங்களுக்கு பிறகு இன்னொரு சகாலை வணக்கக் கூட்டத்தில் பேசிய தமிழய்யா எங்களுக்கு பின்னால் வரையப்பட்டிருந்த காந்தியை, அன்னைத் தெரசாவை சுட்டிக்காட்டி “நீ அன்னைத் தெராசாவைப் போல வாழ வேண்டாம் ! நீ காந்தியை போல வாழ வேண்டாம் !!…. நீ அவர்களைப் போல வாழ முயற்சி மட்டும் செய் அதுவே நீ சமுகத்துக்கு செய்கிற ஆகப்பெரிய காரியம் “ என்று சொன்னார்.. அன்றைக்கு புரியாமல் ஆச்சர்யப்பட்ட எனக்கு அது புரிய சில வருடங்கள் பிடித்தது
அன்னை தெராசா – ஒரு ஏமாற்று பிம்பம் என்பவர்களுக்கு
அன்னைத் தெரசாவைத் தூற்றிய அனேகப் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். உண்மையோ என யோசிக்கக் கூட ஆரம்பித்திருக்கிறேன் ..ஆனாலும் கூட எல்லா சவுகர்யங்களையும் விட்டுவிட்டு யாருமே இல்லாத நிலையில் யாரென்றே தெரியாத மக்களைத் தொட்டு தூக்கிட முடிவு செய்த /அந்த முடிவை எடுக்க முடிந்த அன்னையின் துணிச்சலுக்கு ஒரு சலாம் நிச்சயம் உண்டுங்க .. நிச்சயம் உண்டு.. உங்களாலயும் என்னாலயும் முடியறது இல்லையே!
கடைசியாக, நாம். நமக்கு வேண்டியவர்களிடமும், அன்றாடம் நாம் சந்திப்பவர்களிடமும், நமக்கு அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும்.
வாருங்கள் வசப்படுத்துவோம் !!!
/ A post For Mother Teresa’s Birthday Aug -26/

No comments:
Post a Comment