Tuesday, 9 September 2014

மனமது செம்மையாயின் .... – 1


(புரிதலும் புரிதல் நிமித்தமும் 1 )
"என்னன்னே தெரியலங்க! மனசு ரொம்ப பாரமா இருக்கு .. ஒரு பத்து நாள் லீவப் போட்டுட்டு எங்கேயாவது போயிடலாம்நு இருக்கு.. "  இந்த வரிகள் நாம் அடிக்கடி கேட்கிறவை. ஏன்உங்களுக்கும் கூட சில பல நேரங்களில் தோன்றியிருக்கும் இல்லையா ?
எஸ்
நோ
மேபி ..

இதை Depression என்றோ மனக்குழப்பம் என்றோ... சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் premenstrual syndrome  என்றோ  முடிவுக்கு வருவதற்கு பல பதிவுகள் நான் போட வேண்டியிருக்கும் .அதை வருங்கால Action Item ஆக வைத்துக் கொள்ளலாம்.





மனம் என்கிற விஷயத்தை கூகுளில் தேடினால் போதும் நம்மைப் போலவே அதுவும் "ஆன்மா" "குண்டலனி" என ஏதோ நமக்கு சம்பந்தமில்லாத விஷயமாக நினைத்துக்கொண்டு தேடல் முடிவுகளைத் தருகிறது . உங்களையும் என்னையும் போலவே 'மனம்' மனது' 'mind ' என்கிற விசயத்தில் கூகுளும் குழம்பி போனதில் குறையொன்றும் இல்லை .

காலையில் கண்விழிக்கும்போதே நேற்று நம்மை திட்டிய மேலாளரை நினைத்துக் கொண்டே எழுந்திருக்கிறோம். பல் விளக்கும்போது எப்படி இருந்தாலும் அவர் எப்படி நம்மை அப்படி சொல்லலாம் ? அவர் மட்டும் சரியா செஞ்சாரா? என்றக் கருத்தை ஏற்று கொண்டு கழுவி ஊற்றுகிறோம் வாஷ் பேசினில். குளிர்ந்த தண்ணிர் முகத்தில் பட்டு முதுகில் வழிகிற குளிர்ந்த  தருணத்தில் இன்னைக்கு திருப்பி கேட்டிடனும் என்று உணர்ச்சி வசப்பட்டு துடைக்கிறோம்  நம்மை .. தோசையை பிட்டு வாயிலே வைக்கிற போது நமக்குள்ளேயே மசாலா சேர்த்து அந்த நிகழ்வைக் கற்பனை செய்கிறோம். டிராபிக்கில் நிற்கிறப் போது நாம் செய்வது சரி என்று நமக்கு நாமே நியாயம் சொல்லிக் கொள்கிறோம்

ஆக மொத்தம் நேத்து திட்டனதுக்கு நியாயம் கேட்கிற இந்த மகா பெரிய ஒரு காரியத்துக்கு  மனது என்கிற சமாச்சாரம் பல வழிகளில் செயல்பட வேண்டியிருக்கிறது

சரி நாம் ஒரு முடிவுக்கு வருவோம்  மனம் என்பது நமது சிந்தனை, கருத்து,  உணர்ச்சி, கற்பனை, நியாயம் போன்ற அறிவு(Intellect ) மற்றும் உணர்வு சார்ந்த விஷயங்களின் தொகுப்பாகிறது.
மனிதனின் செயல்களை எப்படி புரிந்து கொள்ள முடிவதில்லையோ அப்படியே மனதையும் புரிந்துக்கொள்ள முடிவதில்லை
நவீன அறிவியலுக்கு முற்பட்ட காலங்களில் மனம் இறையியலை சார்ந்து ஆன்மா முக்தி என முத்திரையிடப்பட்டு இருந்தது. நம் காலத்திலோ 'மூளை'பற்றின புரிதலின் அடிப்படை எனவும் கான்சியச்னஸ் என்பதற்கு ஈடாகவும் பயன்படுத்தப் படுகிறது என்றாலும் இரண்டுமே தவறு என்பது மட்டும் 110% சரி !!!
நிற்க, இதுவரை படித்ததிலே மனம் என்பது முக்கியமானது என்றும் அதன் நலம் அத்தியாவசியமானது என்றும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்

ஒரு ஐந்து பத்துக் கேள்விகள் கேட்டு உங்களை ஆம் இல்லையென சொல்ல வைக்காவிட்டால் அது மனவியல் சார்ந்த கட்டுரை இல்லை என்ற போது வழக்கத்துக்காக ஒரு 5 கேள்விகள்
1. இன்றைக்கு என்ன தேதி, என்ன கிழமை என்பதை மறந்து விடுகிறீர்களா ?
2. நீங்கள் குளிப்பதற்கு சமீபமாக அதிக நேரம் எடுத்து கொள்கிறிர்களா?
3.பர்சில் பணம் வைத்தோமா இல்லையா என திரும்ப திரும்ப யோசிக்கிறிர்களா?
4.உங்கள் டீமில் எல்லாரும் நீங்கள் இல்லாத போது உங்களை பற்றி பேசிக்கொள்வது போலத் தெரிகிறதா ?
5.மிக வேகமாக ஒரு வேலையை செய்து முடித்து விட்டு சின்ன சின்ன தவறுகளுக்காக திட்டு வாங்கி இருக்கிறிர்களா ?
இதற்கு ஆமென்றோ இல்லை இலயென்றொ பதில் சொல்லி இருக்கலாம் தவறு ஒன்றுமில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் வயது, சூழ்நிலை, மறதி மற்றும் கவனமின்மையின் வெளிப்பாடுகளே.. இது மனதின் ஒரு சில செயல்பாடுகளின் தோல்வியே.
இதையும் தாண்டின சில அடிப்படைஉலவியல் சார்ந்த விஷயங்கள் உண்டு. நாம் தினமும் உச்சரிக்கிற வார்த்தைகள். அவைகளைக் குறித்த காரியங்களை வருகிற தொடர் பதிவுகளில் பார்க்கலாம்

Message for the Post
நம் உடலில் சர்கடியன் கடிகாரம்( Circadian clock ) ஒன்று உண்டு.. வெளிப்புற பகல் இரவு மாற்றத்திற்கு ஏற்ப  மனித உடலின் உயிரி-வேதியல் மாற்றத்தை ஒருங்கிணைக்கிற ஒரு சமாச்சாரம் அது.. உயிரியல் கடிகாரம் என்று வைத்து கொள்ளுங்களேன்...  மனித உடல் இதற்கேற்ப தன்னை அமைத்து கொள்கிறது. நீங்களே யோசித்து பாருங்கள்! .. சரியா 8 மணிக்கு பசிக்க ஆரம்பிக்கும். சிலபேருக்கு சரியா 1 மணிக்கு தூக்கம் வரும் ( மதியமா இரவா உங்கள் சாய்ஸ் ). இதெல்லாம் சர்கடியன் கடிகாரம் பண்ணுகிற வேலை. 

கூகுளில் இன்னும் துருவிப் போனிர்கள்  என்றால், பக்கம் பக்கமாக வாசிக்க கிடைக்கும். ஹோமே வொர்க் இது

No comments:

Post a Comment